ஈரோட்டில் பரிதாபம் கர்ப்பிணி திடீர் சாவு
ஈரோட்டில் கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.
ஈரோட்டில் கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.
தனியார் நிறுவன உதவியாளர்
ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 38). இவரது கணவர் அற்புதராஜ் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். இவர்களுக்கு 22 வயதுடைய ஒரு மகளும், 14 வயதுடைய ஒரு மகனும் உள்ளனர். ஆரோக்கியமேரி தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் ஆரோக்கியமேரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆரோக்கியமேரியை அவரது மகன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபிறகு மாத்திரைகளை வாங்கி கொண்டு அவர்கள் வீடு திரும்பினர்.
5 மாதம் கர்ப்பம்
இந்த நிலையில் மாலையில் மீண்டும் ஆரோக்கியமேரிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆரோக்கியமேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் டாக்டர்கள் பரிசோதனையில் ஆரோக்கியமேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஏற்கனவே ஓரிரு முறை கரு கலைப்பு செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருந்தாலும், ஆரோக்கியமேரியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், ஆரோக்கியமேரியுடன் பழகி வந்த நபர் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.