கூடலூரில் பரிதாபம்:காட்டு யானை தாக்கி விவசாயி பலி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியல்


கூடலூரில் காட்டு யானை தாக்கிய விவசாயி பலியானார். இதை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உடலை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் காட்டு யானை தாக்கிய விவசாயி பலியானார். இதை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உடலை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காட்டு யானை தாக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீநாதன் (வயது 54). இவர் கூடலூரில் உள்ள காமராஜ் நகரில் காபி தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். தனது தோட்டத்திற்கு வந்தார்.

சிறிது நேரத்தில் காபி தோட்டத்துக்குள் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியது. அப்போது காட்டு யானையின் பிளிறல் சத்தமும், ஸ்ரீநாதனின் அலறல் சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது ஸ்ரீநாதன் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அருகில் காட்டு யானை நிற்பதை கண்டனர். பின்னர் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றனர்.

உடலை எடுக்க விடாமல் மறியல்

ஆனால் உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கூடலூர்- பார்வுட் சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலன் ஏற்படவில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

பின்னர் இறந்த ஸ்ரீ நாதன் உடலை தூக்கி கொண்டு காமராஜ் நகரில் இருந்து பொதுமக்கள் ஊர்வலமாக கூடலூர் நகருக்கு வந்தனர். அவர்களை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வைத்து அதிகாரிகள், போலீசார் தடுத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி பொதுமக்கள் ஊர்வலமாக கூடலூர் பழைய பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் முன்பு உடலை நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் தொடரும்

இதைத்தொடர்ந்து நீலகிரி வன பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான வெங்கடேஷ் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காட்டு யானைகள் ஊருக்கு வராமல் இருக்க அகழிகள் தோண்ட வேண்டும். உறுதி அளித்தபடி காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை ஏற்பதாக மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என கூறினர்.

தொடர்ந்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் நேரில் வந்து விவசாயி ஸ்ரீ நாதன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



Next Story