அனுமதியின்றி பெயர் பலகை வைப்பு: கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியல் பொள்ளாச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சியில் அனுமதியின்றி பெயர் பலகை வைத்ததால் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பெயர் பலகையை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அனுமதியின்றி பெயர் பலகை வைத்ததால் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பெயர் பலகையை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
பொள்ளாச்சி கடை வீதியில் நகை கடை, ஜவுளி கடை உள்பட பல்வே வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா கடை வீதியில் நடைபெற்றது. இதற்கு அந்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பெயர் பலகையை அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குபதிவு
இதையடுத்து போலீசார் பெயர் பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு கடை உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து கடைகள் திறக்கப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போலீசார் அந்த பெயர் பலகையை அப்புறப்படுத்தினர்.இதேபோன்று அந்த பகுதியில் நோ-பார்க்கிங் என்று வைக்கப்பட்டு இருந்த பலகையும் அகற்றினர். மேலும் அனுமதியின்றி பெயர் பலகை வைத்ததாக பாரதிய மஸ்தூர் சங்க தொழிற்சங்கத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.