புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயற்சி: ஆந்திர அரசின் திட்டத்துக்கு தடைபெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயற்சி: ஆந்திர அரசின் திட்டத்துக்கு தடைபெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயற்சிக்கும் ஆந்திர அரசின் திட்டத்துக்கு தடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கண்டனம்

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். இரு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையிலான ஆந்திர முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

புல்லூர் தடுப்பணை தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கடைசி தடுப்பணை ஆகும். அந்த அணையின் உயரம் 12 அடியாக உயர்த்தப்பட்ட பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. அதனால், பாலாற்று பாசனப்பகுதிகள் பாலைவனமாகி விடக்கூடும்.

அனுமதிக்க முடியாது

ஆந்திராவின் வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ள ஆந்திர அரசு, இப்போது பாலாற்று நீரையும் தடுக்க முயல்வது நியாயமல்ல.

பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டுவதோ, பாசனப்பரப்பை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயல்வது தவறு; இதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு நடவடிக்கை

புல்லூர் தடுப்பணைக்கான ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு அரசியல் ரீதியாக எதிர்க்காமல் விட்டதுதான், அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆந்திர அரசு ஈடுபடுவதற்கு காரணம் ஆகும். ஆந்திர அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 2016-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டுவரச் செய்து, புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்திற்கு தடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story