சுகாதாரமான நகரமாக மாற்ற திட்டம்: குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு
சுகாதாரமான நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி
சுகாதாரமான நகரமாக மாற்றும் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி நகராட்சி சார்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு, மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி மக்கள் இயக்கத்தை தொடங்கிவைத்தார். அதை தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு பேரணியையும் அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக தலைவர் உறுதிமொழி வாசிக்க, தூய்மை பணியாளர்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் துணை தலைவர் கவுதமன், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
குப்பைகளை தரம் பிரிப்பது
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் இருந்து தினமும் 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் 90 சதவீத குப்பைகளை பொதுமக்கள் பிரித்து கொடுக்கின்றனர். 100 சதவீதம் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து கொடுப்பதற்கு தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு என்கிற தலைப்பில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நடத்தப்படும்.
முதலாவது மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டில் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 2-வதாக பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பரிசு வழங்கி ஊக்குவிப்பு
3-வதாக பள்ளி, கல்லூரிக்கு சென்று பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு பரிசு வழங்கப்படும். இதேபோன்று நகரில் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கு உள்ள குடியிருப்பு நலச்சங்கங்களில் சிறப்பாக குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் சங்கங்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும். பொதுமக்கள் ரோட்டில், சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை வீசி செல்ல கூடாது.
மேலும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பல்வேறு சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொள்ளாச்சி நகரை சுகாதாரமான நகராக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.