விபத்துகளைக் கட்டுப்படுத்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


விபத்துகளைக் கட்டுப்படுத்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

விபத்துகளைக் கட்டுப்படுத்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திகுமாரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளன.

இளம் வயதில் பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தின் மத்தியிலும் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர்களின் கருணையும், ஈகையும், அந்த திடமனதும் போற்றுதலுக்குரியவை. மற்றவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தியாகத் திருவுள்ளங்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் விபத்தில் தங்கள் இன்னுயிரை இழப்பது தமிழகத்தின் அன்றாட நிகழ்வாகி விட்டது. வாகனம் ஓட்டும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பாதி விபத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story