நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள்
சிவகாசி, ராஜபாளையத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் அசோகன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சிவகாசி, ராஜபாளையத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் அசோகன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாவட்ட கலெக்டர் மூலம் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.
இதுகுறித்து அசோகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி கழிவுநீர் வடிகால் திட்டம் கொண்டு வர வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்.
பட்டாசு தொழில்
பட்டாசு தொழில் தடையின்றி ஆண்டு முழுவதும் நடத்திட சுற்றுச்சூழல் சட்ட விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு ஏற்றுமதி செய்ய கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறை முகங்களில் தடையில்லா சான்று பெற்று தர வேண்டும். அச்சுத்தொழிலுக்கு தனியாக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை மடை மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் வகுப்பறை
அதேபோல ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜபாளையம் தாலுகாவை பிரித்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும், சேத்தூர் பேரூராட்சிக்கும் குடிநீர் வழங்க சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அரசு நிலத்தில் குளிர்சாதனவசதியுடன் திருமண மண்டபம், சொக்கநாதன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுந்தரராஜபுரம் அரசு ஆதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, சுந்தர நாச்சியாபுரம் தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவேண்டும். ராஜபாளையம் தொகுதியில் கிராமப்புற தெருக்களை சீரமைக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை, ராஜபாளையத்தில் அரசு கல்லூரி, சிட்கோ தொழில்பேட்டை, மாம்பழ பதப்படுத்தல் மற்றும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
அய்யனார் கோவில் அருவிப்பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்ல பாதை அமைத்து சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். ராஜபாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும். வடக்கு தேவதானத்திலிருந்து தெற்கு தேவதானம், கோவிலூர் பெரியகுளம் வரை செல்லும் சின்ன ஓடையை தூர் வரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.