சிறுதானியங்கள் காய்கறிகள் அதிகமாக பயிரிடுங்கள்விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


சிறுதானியங்கள் காய்கறிகள் அதிகமாக பயிரிடுங்கள்விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுதானியங்கள், காய்கறிகளை அதிகமாக பயிரிடுங்கள் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான கருத்தரங்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டகலை துறை துணை இயக்குனர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிக லாபம் பெற முடியும்

கருத்தரங்கில் காய்கறி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கையேட்டை கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இங்கு கரும்பு, நெல் போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு மாவட்டத்திற்கு வேளாண் பொருட்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அனைத்து வசதிகளும் உள்ளது.

எனவே விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் பெற முடியும். இதனால் அதிக அளவில் வருமானம் ஈட்டுவதுடன், மண்ணின் சத்தும் சீரான முறையில் இருக்கும்.

வெளிமாநிலத்துக்கு விற்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இலவச தென்னங்கன்றுகள், 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். வாடகைக்கு எந்திரங்கள் கொடுக்கும் திட்டம், இ-வாடகை என்ற திட்டம், விவசாயிகள் தங்கள் பயிரிட்ட பொருட்களை வெளிமாநிலத்திலத்திற்கு ஆன்லைனில் விற்பனை செய்வது உள்ளிட்டவைகளும் இந்த செயலி மூலம் அறிந்து செயல்படலாம்.

சிறுதானிய பயிர்கள்

தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும்.

அதேபோன்று சமீபத்தில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள். எனவே காய்கறிகளையும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும் சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

இதுபோன்ற கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து தங்களுக்கு அன்றாடம் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெரிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேளாண் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் பார்வையிட்டார். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்கள் கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story