களை செடிகளை அகற்றிய இடத்தில் மழை தாவரங்கள் நடவு


களை செடிகளை அகற்றிய இடத்தில் மழை தாவரங்கள் நடவு
x
தினத்தந்தி 31 July 2023 2:15 AM IST (Updated: 31 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

களை செடிகளை அகற்றிய இடத்தில் மழை தாவரங்கள் நடவு

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை வனப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் லண்டானா களை செடிகள் அதிகளவில் உள்ளன. இந்த களை செடிகளை வனத்துறையினர் ஆண்டுதோறும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வனப்பணியாளர்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்களின் உதவியுடன் அகற்றும் பணியை செய்து வருகின்றனர்.

ஆனால் மீண்டும் அதே இடத்தில் களை செடிகள் முளைத்து விடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வால்பாறையை பூர்வீகமாக கொண்ட மழைக்காடுகளை உருவாக்கக்கூடிய தாவர இனங்களை வனத்துறையினர் நட்டு வருகின்றனர். இதற்காக வனத்துறையின் இயற்கை வனவள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மழைக்காடுகளை உருவாக்கக்வடிய பூர்வீக தாவர இனங்களின் விதைகளை சேகரித்து நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நாற்றுகளை மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பெற்று சிங்கோனா வனப்பகுதியில் லண்டானா களை செடிகளை அகற்றிய இடங்களில் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் கள பணியாளர்களுடன் இணைந்து நடவு செய்து மழைக்காடுகளை வளர்த்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வால்பாறை வனப்பகுதியை பூர்வீகமாக கொண்ட மழைக்காடுகளை உருவாக்கக்கூடிய தாவர இனங்களை காடு வளர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக களை செடிகளை அகற்றிய இடத்தில் நடவு செய்கிறோம். இதன் மூலம் இந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் இதே வனப்பகுதிக்கு சொந்தமான தாவரங்களை பார்க்கும்போது அவைகளுக்கு சொந்த காடுகளில் நடமாடும் உணர்வு கிடைக்கும்.

மேலும் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் அடிப்படையில் மழைக்காடுகளை உருவாக்கக்கூடிய தாவரங்களையே நடவு செய்வதால் மழைப்பொழிவை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. விரைவாக நாற்றுகளும் வளர்ந்து விடும் என்பதால் வனப்பகுதியின் செழிப்பும் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story