800 மரக்கன்றுகள் நடும் பணி
மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
800 மரக்கன்றுகள்
மயிலாடுதுறை அருகே நீடூர்-கடுவங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 800 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் பசுமை தமிழ்நாடு இயக்க உறுதிமொழியினை கல்லூரி மாணவிகள், வனத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். அப்போது கலெக்டர் பேசியதாவது:
பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள், கல்வி-பொது நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடும்பணியினை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் வகையில் மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலைக்கும், மண்ணின் தரத்திற்கும் ஏற்றவாறு தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
மரக்கன்றுகள் தேவைப்படுபவர்கள் மரக்கன்றுகள் வைப்பதில் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரின் விருப்ப மனு, தீர்மான நகல் மற்றும் தொடர்புடைய துறையின் தடையில்லா சான்று, கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் வரைபடமும், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களாக இருந்தால் தலைமை ஆசிரியர், முதல்வரின் வேண்டுகோள் கடிதம், விவசாய நிலங்களாக இருந்தால் சிட்டா அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் சீர்காழி வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரக்கன்றுகளை வைத்து, பசுமையினை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார்.
முன்னதாக கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், ஊராட்சிமன்ற தலைவர் தேவேந்திரன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.