வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகை

வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் கன மழையின் போது விடுமுறை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கனமழை பலத்த காற்றுடன் பெய்யும் சமயத்தில் வேலை நேரத்தை குறைத்து விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிறுவனங்களின் உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- அக்காலை எஸ்டேட் நிர்வாகம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நாங்கள் மதிய உணவுக்காக வீடுகளுக்கு சென்று வரமுடியாததால் நாங்கள் கொண்டு வரக்கூடிய மதிய உணவை தேயிலை இலைகள் அளவை செய்யப்படும் கூரையின் கீழ் வைத்துத் தான் சாப்பிட வேண்டும். ஆனால் கூரைகள் உடைந்து கிடப்பதால் மழையினால் நனைந்தபடி உணவருந்தி வருகிறோம். எங்களது குடியிருப்புகள் அனைத்தும் பழுதடைந்து மழையினால் ஒழுகிக் கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
குடியிருப்புகளை பராமரிப்பு செய்து தருவதில்லை. தேயிலை தோட்ட பகுதியில் பாதுகாப்பான முறையில் தேயிலை இலை பறிக்கும் வகையில் தேயிலை தோட்டங்களை பராமரிப்பு செய்து தருவதில்லை. தற்போது வால்பாறை பகுதி முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இதனால் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள அக்காலை எஸ்டேட் பகுதியில் கனமழை சமயத்தில் கடுமையான குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. எனவே கனமழை சமயத்தில் வேலை நேரத்தை குறைத்து எங்களுக்கு 2 மணிநேரம் விடுமுறை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து அங்கு வந்த வால்பாறை தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அக்காலை எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலருடன் இணைந்து தொழிலாளர்கள் புகார் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






