உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி


உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
x

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

உலக இயற்கை பாதுகாப்பு தினம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடக்கூடிய ஒரு விழா தொடங்கி உள்ளது. இதில் நாட்டு மரக்கன்றுகளான வேம்பு, அரசு, ஆல், அத்தி, நாவல், உசில், ஆச்சா, புங்கன், மந்தாரை, மகிழம், சரக்கொன்றை முதலியன நடப்பட உள்ளன. மாவட்ட கனிமவள பசுமை நிதியில் இருந்து மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கும், குவாரிகளில் மரங்களை நடுவதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் கனிம வளத்துறை நிதியில் இருந்து ரூ.12 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் டேங்கருடன் கூடிய டிராக்டர் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் குழி வெட்டும் எந்திரம் உள்ளிட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான வாகனங்களை மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

4 சதவீதம் மட்டுமே

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை ஓரங்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வளர்ந்த நிலையில் உள்ள மரங்கள் நடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வருகை தந்த போது நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஊரக பகுதிகளில் பல ஊராட்சிகளில் 2 லட்சம் வரை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தலா ஒரு லட்சம் மரக்கன்றுகள் 5 ஊராட்சிகளில் நடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளிலும் இத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் 4 சதவீதம் மட்டுமே இருக்கும் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பள்ளிக்கல்வித்துறை போன்ற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளோம். இப்போது கனிமவள துறையும் சேர்ந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story