புல்லுக்காட்டில் மரக்கன்றுகள் நடவு
சாலையோரத்தில் குப்பைகளை அகற்றி விட்டு புல்லுக்காட்டில் மரக்கன்றுகள் நடவு
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சாலையோரத்தில் பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடந்தது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதையடுத்து அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்கு நேற்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், கோவையில் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கும் இடங்க ளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புல்லுக்காடு பகுதியில் சாலையோரம் தேங்கி கிடந்த 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. அங்கு 600 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி உள்ளது. இதே போல் மாநகரில் 22 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அங்கு குப்பை களை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நடப்படும். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என்றார்.