மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் நடப்படும் மரமக்கன்றுகளை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் நடப்படும் மரமக்கன்றுகளை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கன்றுகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு நடப்படும் மரக்கன்றுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து மாதிரவேளூர்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காமராஜ் கூறியதாவது:- கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால் முறைப்படி தண்ணீர் ஊற்றாததால், மரக்கன்றுகள் பல வெயிலில் கருகி விட்டன.
வேலி அமைக்க வேண்டும்
இதனால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே மரக்கன்றுகளை நட்டவுடன் அதனைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். கொள்ளிடம் ஒன்றியத்தில் நடப்பட்ட பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளில் பெரும்பாலானவை வீணாகி விட்டன. எனவே நடப்படும் மரக்கன்றுகளை பராமரிக்க அந்தந்த ஊராட்சிகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.