திருச்செங்கோட்டில் திடீர் சோதனை: 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-10 கடைக்காரர்களுக்கு அபராதம்

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 10 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நகராட்சிக்குட்பட்ட கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டல்கள், மளிகைக்கடைகள், பேன்சி கடைகள் மற்றும் மொத்த பொருட்கள் விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 டன் பறிமுதல்
இதையடுத்து ஒரு டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சோதனையின் போது சேலம் தூய்மை இந்தியா திட்ட அலுவலர் ஜெகதீசன், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன், பரப்புரையாளர் கலை, துப்புரவு ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.