பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து பசுமை மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து பசுமை மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் பேசினார்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து பசுமை மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் பேசினார்.
விழிப்புணர்வு போட்டிகள்
திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'ஒருமுறை பயன்பாட்டு நெகிழி தடை' என்ற விழிப்புணர்வு போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'ஒருமுறை பயன்பாட்டு நெகிழி தடை' விழிப்புணர்வு போட்டியில் மாவட்டத்தில் உள்ள 350 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மஞ்சப்பை
சுவர் ஓவியம், நாடகம், கட்டுரை, ஸ்லோகன் ஆகிய போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களது உற்றார், உறவினர், குடும்பத்தாரிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுத்தமான, சுகாதாரமான, பசுமையான மாநகராட்சியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) பக்தவச்சலம், உதவி ஆணையாளர் செல்வநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.