மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் சுடுமணலில் நடப்பதற்கு பிளாஸ்டிக் வண்டி வசதி


மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் சுடுமணலில் நடப்பதற்கு பிளாஸ்டிக் வண்டி வசதி
x

அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயிலால் மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் சுடுமணலில் நடப்பதற்கு பிளாஸ்டிக் வண்டி வசதி செய்து தரப்பட்டு உள்ளது.

சென்னை

மெரினா கடற்கரை

சென்னையில் வசிப்பவர்களுக்கு ஒரே பெரிய பொழுது போக்கு மெரினா கடற்கரைதான். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து கடல் அலைகளில் விளையாடி பொழுதை கழித்து செல்கின்றனர். கடலில் இறங்கி ஆபத்தான வகையில் விளையாடும் இளைஞர்களை போலீசார் குதிரைகளில் வந்து கண்காணிக்கின்றனர். அதனையும் மீறி இளைஞர்கள் சிலர் கடல் அலையில் சிக்கி இறக்கும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.

அனைத்து தரப்பினரும் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதையும் அமைத்து தரப்பட்டு உள்ளது. இதேபோல் முதியவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் பகல் பொழுதில் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு உள்ளது.

மூன்று சக்கர பிளாஸ்டிக் வண்டி

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் மணல் சற்று சூடாகத்தான் இருக்கிறது. இதில் நடந்து செல்வது கடினம். இதனால் பகல் பொழுதில் வருபவர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் பகுதியை கடந்து செல்வதற்காக மூன்று சக்கர பிளாஸ்டிக் வண்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்படுபவர்கள் அப்பகுதிக்கு சென்றால் வண்டிகளை பாதுகாத்து வருபவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள். இதனை பெற்றுக்கொண்டு கடல் அலை இருக்கும் பகுதி வரை சென்று வரலாம். இதற்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் சற்று அதிகமாக வருவதால் கூட்டத்துக்கு ஏற்ப வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து தர வேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் வண்டிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story