மாங்காடு அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது; வெப்பத்தால் 2 வீடுகளின் சுவரில் விரிசல்


மாங்காடு அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது; வெப்பத்தால் 2 வீடுகளின் சுவரில் விரிசல்
x

மாங்காடு அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதன் வேப்பத்தால் 2 வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

தீப்பிடித்து எரிந்தது

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், இரும்புகள் மற்றும் பெயிண்டு் டின் உள்ளிட்டவைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை திடீரென இங்கு குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.

வீடுகளில் விரிசல்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொதுமக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தின்போது வெப்பத்தின் தாக்கம் காரணமாக அந்த பகுதியில் இருந்த 2 வீடுகளின் சுவரில் விரிசலும், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் உருகியும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story