பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த கூடாது
சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த கூடாது என கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கொடி கம்பம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நாளை காலையில் தேசியக்கொடியை கலெக்டர் உமா ஏற்றி வைக்கிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர், சிறப்பாக பணியாற்றி அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்க உள்ளார். தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை
இதற்கிடையே கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவானது நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது. இந்திய திருநாட்டின் தேசியக்கொடிக்கு மரியாதை செய்யும் விதமாக, பருத்தி, பாலியெஸ்டர், பட்டு மற்றும் காகிதம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேசியக்கொடியின் பயன்பாடு முடிந்தவுடன் அதனை தரையில் போட்டுவிடாமல் அதன் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படாத வகையில் அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.