பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெற்ற பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெற்ற பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து கொள்ளிடம் பகுதி வழியே சென்று ரெயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே பூமிக்கு அடியில் செல்லும் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சென்று கலக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாசன வாய்க்கால் சிறந்த வாய்க்காலாகவும், சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் வாய்க்காலாகவும், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்புகளில் தேங்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகித்து வரும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வந்தது.
தேங்கி நிற்கிறது
ஆனால் காலப்போக்கில் இந்த முக்கிய பாசன வாய்க்கால் சில பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் போதும் எளிதில் தண்ணீர் உரிய இடங்களுக்கு போய் சேர முடியாமல் அப்படியே தேங்கி கிடக்கின்றது.
இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பதால் கடந்த ஆண்டு பருவ மழையின் போது அதிக மழை பெய்ததால் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சூழ்ந்திருந்த மழை நீர் வெளியேறிச் செல்வதற்கு அதிக நாட்கள் ஆகிறது. இந்த வாய்க்கால் மட்டும் ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருந்திருந்தால் தண்ணீர் எளிதில் வெளியேறி இருக்கும். மேலும் அப்பகுதியில் உள்ள நிலங்களு எளிதில் பாசன வசதி பெற முடியும். காலப்போக்கில் இந்த வாய்க்காலை நம்பி தண்ணீர் பாசனம் பெரும் விவசாயிகள், நிலங்களுக்கு தண்ணீர் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தூர்வார வேண்டும்
இந்த நிலையில் இந்த வாய்க்காலில் கொள்ளிடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்தும் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரில் குப்பை மற்றும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டு வாய்க்காலை அடைத்துக்கொண்டு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும், இந்த கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாலும் சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த முக்கியமான பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து செல்லும் வகையிலும், அதிக மழை பெய்யும் போது மழை நீர் எளிதில் வடியும் வகையிலும் தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால்...
கொள்ளிடத்தை சேர்ந்த ஜலபதி கூறியதாவது:-
கொள்ளிடத்தில் முக்கிய வடிகாலாகவும் பாசன வாய்க்காலாகவும் இருந்துவரும் தெற்கு ராஜன் வாய்க்காலின் கிளை வாய்க்கால், கொள்ளிடம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகளில் தேங்கும் அதிகப்படியான கழிவுநீரை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தற்போது மழைக்காலங்களிலும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் போதும் எளிதில் தண்ணீர் உரிய இடங்களுக்கு போய் சேர முடியாமல் அப்படியே தேங்கி கிடக்கின்றது. ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் ஊராட்சியில் உள்ள குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வடிய வசதி இல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே வாய்க்காலை தூர்வாரி கழிவு நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
தொற்று நோய் பரவும் அபாயம்
கொள்ளிடத்தை சேர்ந்த விவசாயி பூபதி கூறியதாவது:-
கொள்ளிடத்தில் உள்ள இந்த பிரதான பாசன வாய்க்காலை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கொள்ளிடம் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாகியதால், இந்த வாய்க்கால் கழிவுநீரின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் சாக்கடை தண்ணீர் தான் அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பதால், கழிவு நீர் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அரசு முக்கிய கவனம் செலுத்தி பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.