பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் 'பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடி' என்பது தான். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்கள் தான். அத்தகைய சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்தாண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தின மையக்கருவாக பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.