பாசன கால்வாய்களை பாழாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
ஆனைமலையில் பாசன கால்வாய்களை பாழாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஆனைமலை
ஆனைமலையில் பாசன கால்வாய்களை பாழாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பாசன கால்வாய்கள்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாகவும், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அரியபுரம் பெரியணை 5 கால்வாய் வழியாகவும் தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் வேட்டைக்காரன்புதூர் அருகே உள்ள கிளை பாசன கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் கால்வாய்களின் ஓரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இது தவிர அந்த பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பாசன கால்வாய்கள் பாழாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தண்ணீர் மாசுபடுகிறது
கால்வாய்களில் தண்ணீர் செல்லும்போது, அதில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், புதர் செடிகள் அடித்து செல்லப்பட்டு, விவசாய விளைநிலங்களில் படிகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் விளைநிலம் மாசுபடுவதாக அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆனைமலையில் மாசாணியம்மன் கோவில், டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியாறு போன்றவை சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. விடுமுறை நாட்களில் அந்த பகுதிகளில் கூட்டம் அதிகரிக்கிறது. அவர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் பாசன கால்வாய்களுக்கு வருகிறது. மேலும் காலி மது பாட்டில்களும் வீசப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது.
கடும் நடவடிக்கை
இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. இதனால் கால்வாய்களில் சேகரமாகும் கழிவுகள் விளைநிலங்களில் படிகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே பாசன கால்வாய்களை முறையாக பராமரிக்கவும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.