யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள்


யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 10:30 PM GMT (Updated: 16 Jun 2023 10:30 PM GMT)

குன்னூர் அருகே மலை ரெயில் தண்டவாளத்தில் யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

குன்னூர் அருகே மலை ரெயில் தண்டவாளத்தில் யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அரிய வனவிலங்குகள் வாழும் சுற்றுச்சூழல் மண்டலமாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர், பாலித்தீன் பைகள், பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் போன்ற பிளாஸ்டிக்கால் ஆன அனைத்து பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக உலா வருகின்றன. அவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி தண்டவாளத்தில் உலா வருவதை காண முடிகிறது.

பறிமுதல் செய்ய வேண்டும்

இந்தநிலையில் அந்த தண்டவாளத்தில் கிடக்கும் யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது வனவிலங்குகள் ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி விட்டு செல்கின்றனர். அவற்றை யானைகள் உண்டு வருகின்றன. இதன் காரணமாக தான் தண்டவாளத்தில் உலா வந்த யானைகளின் கழிவுகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தென்பட்டு உள்ளது.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டி ஆண் யானை சுற்றித்திரிந்து வருகிறது. அந்த யானையின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பின் அதனை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story