ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ. 20 லட்சத்தை இழந்த 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருவொற்றியூர்:
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். இபெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வரும் விளம்பரங்கள் அவருக்கு அதில் மேலும் ஆர்வத்தை தூண்டியது. இதனால் பல்வேறு வழிகளிலும் திரட்டிய பணத்தை பவானி ரம்மி விளையாட்டில் செல்வழித்தார். இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.
பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. பவானிக்கு 2 தங்ககைகள் உள்ளனர். முதல் தங்கை பாரதி எண்ணுரிலும், 2-வது தங்கை கவிதா பெரியபாளையத்திலும் வசித்து வருகிறார்கள்.
இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை கடனாக பவானி வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவர் ஈடுபட்டார். தங்கை பாரதியிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பும், தங்கை கவிதாவிடம் 4 மாதத்துக்கு முன்பும் பவானி பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு மொத்தமாக பணத்தை இழந்துள்ளார்.
வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் செலுத்தி பணத்தை இழந்துள்ளார்.
இப்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்கை பாரதியிடம் முறையிட்ட பவானி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அப்போது அவர் பவானிக்கு ஆறுதல் கூறியதுடன் இதற்கு மேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதே என்று அறிவுரை கூறி இருக்கிறார்.
இருப்பினும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பவானி மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பவானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற பவானி, நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் பாக்யராஜ் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ், பவானியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பவானியின் கணவர் பாக்யராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.