ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?


ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
x

திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

விளையாட்டு மைதானம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். உலக புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் இங்கு உள்ளது. லாரி தொழில், நெசவுத்தொழில், கல்லூரி, பள்ளிகள், தொழிற்சாலைகள் என சிறந்து விளங்குகிறது.

திருச்செங்கோட்டை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் திருச்செங்கோட்டின் வளர்ச்சிக்கு மேலும் மணி மகுடமாக அமையும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் ஒரு இடத்தில் அமைய பெற்றால் நகரின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்செங்கோடு நகரை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருந்திடவும், விளையாட்டுத்துறைகளில் முன்னேறிடவும் இது உதவிகரமாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது போல் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவும், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர்களாக தகுதி பெறவும் உதவும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

நடைபயிற்சி

காப்பீடு ஆலோசகர் இளங்கோவன்

திருச்செங்கோடு நகரில் பொழுதுபோக்கு பூங்காவுடன் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். பெருநகரங்களில் உள்ளது போல் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்தால் உடல் ஆரோக்கியம் மேம்பட நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

அதேபோல் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடவும் உதவும். அந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்திலேயே உடற்பயிற்சி கூடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய கண்காட்சிகள், வணிக வளாகங்கள் அமைத்து கொடுத்தால் நகரின் வளர்ச்சிக்கு மேலும் உதவும்.

மன அழுத்தம் குறையும்

ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் குமரகுருபரன்:-

புனித ஸ்தலமான திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் மலை உள்ளது. இங்கு பொதுமக்கள் சுற்றி வர கிரிவல பாதை உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு தொழில் வளம் நிறைய உள்ளது. ஆனால் திருச்செங்கோடு மற்றும் சுற்றி உள்ள மக்களின் ஆரோக்கியம் மேம்பட திருச்செங்கோடு நகருக்கு ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அவசியமாகும்.

ஏனெனில் தற்போதைய வாழ்க்கை முறையில் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் பொதுமக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகின்றனர். எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட பொழுதுபோக்கு அம்சங்களில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும். மேலும் நடைபயிற்சி அல்லது ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களது நேரத்தை இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் செலவிட வேண்டும். அதனால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனுபவிக்கலாம். அதற்கு ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும்.

சிறந்த விளையாட்டு வீரர்கள்

பட்டதாரி வாலிபர் கோகுல்:-

திருச்செங்கோடு நகர மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கும், தங்களது உடல் திறன், செயல்திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்படவும் விளையாட்டு மைதானம் மிகவும் அவசியமாகும். தற்போது உடற்பயிற்சி மற்றும் கிரிக்கெட் விளையாட தனியார் கிளப், தனியார் ஜிம்முக்கு இளைஞர்கள் சென்று கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.

அரசு சார்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை அமைத்து அதில் கிரிக்கெட், கால்பந்து, பேட்மிட்டன் விளையாடவும், நீச்சல் குளம் வசதியும் ஏற்படுத்தி கொடுத்தால் மாணவ சமுதாயம் மற்றும் இளைஞர்கள் அதை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும் இந்த பகுதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகி திருச்செங்கோடு நகருக்கு பெருமை சேர்க்கும் அது விதமாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story