முத்தண்ணன் குளக்கரையில் விளையாட்டு மைதானம்
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்ணன் குளக்கரையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்ணன் குளக்கரையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாங்குளம், முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள முத்தண்ணன் குளம், ரூ.50 கோடியில் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் ஆக்கிரமித்து இருந்த 2 ஆயிரம் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து முத்தண்ணன் குளக்கரையில் அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு, சைக்கிள் செல்ல பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிறுவர்கள் விளையாடி மகிழ குளக்கரையில் கூடைப்பந்து மைதானம் மற்றும் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர ஊஞ்சல்கள், சறுக்கு உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கூடைப்பந்து மைதானம்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் உள்ள குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதலில் உக்கடம் வாலாங்குளம் குளக்கரையில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து முத்தண்ணன் குளக்கரையில் பூசாரிபாளையம் பகுதியில் தரமான கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. விளையாட்டு மைதானம் தவிர்த்து அழகிய பூங்கா, குளத்தின் அழகை காணும் வகையில் மாடங்கள், இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இங்கு பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்க தேவையான நிறுத்துமிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.