மின்நிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்நிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி கூறினார்.
திருவாரூர்;
திருவாரூர் கோட்ட மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்ட மின் பராமரிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 38 இடங்களில் புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.1,104 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 31 இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 48 இடங்களில் மின்மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் 2-ம் கட்ட பணி வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) வரை நடக்கிறது. இந்த பணிகள் காரணமாக அந்தந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் அடிக்கடி ஏற்படும் மின்நிறுத்தங்களை பொருத்துக்கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.