தர்மபுரியில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு-கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
தர்மபுரி:
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சமப்படுத்துதல் என்ற கருப்பொருளை மையப்படுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரியில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சமப்படுத்துதல் என்ற கருப்பொருளை மையப்படுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் எச்.ஐ.வி. என்னும் எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2010-ம் ஆண்டு முதல் தற்போது வரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 2,180 நபர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகளும், 1,681 நபர்களுக்கு மாதாந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை
மேலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ரூ.2,000 உதவித்தொகையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு படிப்போருக்கு ரூ.3,000 உதவித்தொகையும், கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் என மொத்தம் 159 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக ரூ.4.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் இணைந்து எச்.ஐ.வி. என்னும் எய்ட்ஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கையெழுத்து இயக்கம்
இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மேலும் மாநில அளவில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, அரசு மருத்துவக்கல்லுரி துணை முதல்வர் சாந்தி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், மாவட்ட எய்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் உலகநாதன், கல்லூரி மாணவ, மாணவிகள், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.