ரெயில்வே தனியார்மயத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உறுதிமொழி


ரெயில்வே தனியார்மயத்தை கண்டித்து  மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உறுதிமொழி
x

ரெயில்வே தனியார்மயத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மதுரை


அகில இந்திய அளவில் ரெயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ், அகவிலைப்படி, பதவி உயர்வு ஆகியன வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1947-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று உயிரிழந்த ரெயில்வே தொழிலாளர்களுக்கு அஞ்சலி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரை கோட்ட ரெயில்வேயில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் வேலைநிறுத்தப்போராட்ட தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்களது பெயர் பலகைக்கு எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகள் கடந்த காலத்தில் எப்படி போராட்டத்தின் மூலமாக வென்றெடுக்கப்பட்டதோ அதேபோல மோடி அரசின் தாராளமய, தனியார்மய கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். மத்திய பா.ஜ.க. அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்கள், பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1947-ம் ஆண்டு நடந்த தீவிர போராட்டம் போல, தொடர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்ட செயலாளர் ஜே.எம்.ரபீக் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், மதுரை கோட்டத்தை சேர்ந்த பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story