வயலில் உழுதபோது பண்டைய கால பண்டக்குழி வெளிப்பட்டது


வயலில் உழுதபோது பண்டைய கால பண்டக்குழி வெளிப்பட்டது
x

வயலில் உழுதபோது பண்டைய கால பண்டக்குழி வெளிப்பட்டது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள காவேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). விவசாயியான இவர் நேற்று தனது வயலில் சோளம் சாகுபடி செய்வதற்காக வாடகை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது டிராக்டரின் இரும்பு கலப்பையில் பெரிய பாறாங்கல் ஒன்று சிக்கி பெயர்ந்து மேலே வந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் திடீரென சுமார் 10 அடி ஆழ குழி ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு ஆச்சரியம் அடைந்த சங்கர், இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முன்பகுதியில் சிறிதாகவும், உள்ளே செல்ல செல்ல அகன்றதாகவும் காணப்பட்ட அந்த குழியானது பண்டைய காலங்களில் மக்கள் தானியங்கள் மற்றும் விளை பொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பண்டக்குழி என்பது தெரியவந்தது. இந்த குழியில் பண்டைய கால மக்கள் தங்களின் தானியங்கள் மற்றும் விளை பொருட்களை சேமித்து மேற்பரப்பில் வைக்கோல் அல்லது கற்பலகைகளை கொண்டு மூடி பாதுகாப்பார்கள். தற்போது இதுபோன்று வயல்வெளிகளை உழும்போதும், வீடு கட்டுவதற்காக குழி தோண்டும்போதும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு மண்ணில் மறைந்திருக்கும் பண்டக்குழிகள் தென்படுகின்றன என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த பண்டக்குழி குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story