பிளஸ்-1 தேர்வில்95.43 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வில்95.43 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 95.43 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் 95.43 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்-1 தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதே போன்று மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட 203 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 401 மாணவர்கள், 10 ஆயிரத்து 576 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 977 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 778 மாணவர்கள், 10 ஆயிரத்து 332 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 110 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.43 சதவீதம் ஆகும். மாணவர்கள் 92.58 சதவீதம் பேரும், மாணவிகள் 97.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சியில் 5-வது இடத்தை எட்டிப்பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிக்கூடம்

மாவட்டத்தில் உள்ள 7 அரசு பள்ளிக்கூடங்கள் உள்ள 57 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. இதில் செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, காலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி, தேரிகுடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழபூவானி அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

மேலும் இயற்பியலில் 7 பேரும், வேதியியல், விலங்கியல், வரலாறு, பொருளாதாரத்தில் தலா ஒருவரும், வணிகவியலில் 3 பேரும், கணக்கு பதிவியலில் 35 பேரும், கம்ப்யூட்டர் அறிவியலில் 19 பேரும், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்கில் 114 பேரும், வேளாண்மை அறிவியலில் 166 பேரும், வேலைவாய்ப்பு திறன்கள் 4 பேரும், நர்சிங் 69 பேரும், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 23 பேரும், உணவு மேலாண்மை 13 பேரும், கம்ப்யூட்டர் பயன்பாடு 20 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 2 பேரும், அச்சுக்கலை மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு 67 பேரும், ஆடிட்டிங் 525 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.


Next Story