பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லதா. இவருடைய மகள் ஹரிணி (வயது 16). இவர் பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கடந்த 21-ந் தேதி பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஹரிணி காப்பி அடித்து பிடிபட்டதாகவும், இதனால் மாணவியை ஆசிரியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பள்ளியை முற்றுகை

நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவி உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் மாணவி ஹரிணி படித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும், மாணவியை திட்டிய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லாவரம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story