பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு; மாணவ-மாணவிகள் உற்சாகம்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு; மாணவ-மாணவிகள் உற்சாகம்
x

பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 75 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 23 மாணவர்கள், 3 ஆயிரத்து 835 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 858 பேர் 32 மையங்களில் தேர்வு எழுதினர்.இதே போல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 83 பள்ளிகளை சேர்ந்த 4,035 மாணவர்களும், 4,760 மாணவிகளும் என மொத்தம் 8,795 பேர் 41 மையங்களில் தேர்வு எழுதினர்.

மாணவ-மாணவிகள் உற்சாகம்

நேற்று கடைசி தேர்வாக தாவரவியல், உயிரியல், வரலாறு, அடிப்படை மின் பொறியியல், வணிக கணிதம், அலுவலக மேலாண்மை ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

துள்ளிக்குதித்தனர்

தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்தனர். சில மாணவ-மாணவிகள் பள்ளி பருவம் முடிந்ததால், பிரிவை நினைத்து கண்ணீர் சிந்தியதையும் பார்க்க முடிந்தது. பின்னர் தேர்வு மையத்தை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் தங்களது நண்பர்களுடனும், மாணவிகள் தங்களது தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடி, செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்களில் சிலர் ஓட்டல்களுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.


Next Story