பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
x

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 33 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 44 தேர்வு மையங்களிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறை எண்ணை பார்த்து தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து 9.30 மணியளவில், தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துக்கூறி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரிவித்தனர். பின்னர் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையே தேர்வு நடக்கும்போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்வத்துடன் எழுதினர்

பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 79 பள்ளிகளை சேர்ந்த 3,903 மாணவர்களும், 3,752 மாணவிகளும் என 7,655 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வை 7,384 பேர் எழுதினர். 166 மாணவர்களும், 101 மாணவிகளும் என மொத்தம் 267 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளை சேர்ந்த 4,431 மாணவர்களும், 4,661 மாணவிகளும் என மொத்தம் 9,092 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வை 8,645 பேர் எழுதினர். ஆனால் 263 மாணவர்களும், 183 மாணவிகளும் என மொத்தம் 446 பேர் தேர்வு எழுத வரவில்லை.

16,029 மாணவ-மாணவிகள்...

இதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-2 தமிழ் தேர்வினை மொத்தம் 16,029 மாணவ, மாணவிகள் எழுதினர். மாவட்டங்களில் தமிழ் தேர்வினை எழுத மொத்தம் 713 பேர் வரவில்லை. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்பேரில் செய்யப்பட்டிருந்தன.

மாவட்டங்களில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும் மற்றும் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூடுதல் துறை அலுவலராக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.


Next Story