பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துணை பொதுத்தேர்வு
பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.க்கான துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று இணையதளம் மூலம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக கல்வி மாவட்டம் வாரியாக சில மேல்நிலைப்பள்ளிகளை அரசு தேர்வுத்துறை சேவை மையங்களாக செயல்பட சென்னை அரசுத்தேர்வுகள் இயக்குனரால் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை மையங்கள்
அதாவது திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தற்போது கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்விற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட அரசு தேர்வுத்துறை சேவை மையங்களாக செயல்படும் பள்ளிகளை அணுகி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.