பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
வெறையூர் அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டார்.
வாணாபுரம்
வெறையூர் அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டார்.
காதல்-கண்டிப்பு
திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அருகே உள்ள பவித்ரம் பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன். இவரது மகன் செல்வபிரவின் (வயது 17). ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவன் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று செல்வபிரவின் மற்றும் மாணவி இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தாய் மாணவன் செல்வபிரவின் வீட்டுக்கு சென்று, எனது மகளிடம் ஏன் போனில் பேசுகிறாய்?, இதுபோன்று தொடர்ந்து எனது மகளிடம் பேசினால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
மாணவர் தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த செல்வபிரவின் திப்பைக்காடு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெறையூர் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.