பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி
பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவி, பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மகள் லட்சுமி ஸ்ரீ (வயது 17). இவர், குரோம்பேட்டை நேருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ கலந்து கொண்டார். கலை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ, தனது சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் வந்தபோது, பின்னால் பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற மாநகர பஸ் மாணவி மீது மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த மாணவி லட்சுமி ஸ்ரீயின் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவி லட்சுமி ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
சாலை மறியல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பின்னர் பலியான மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாநகர பஸ் டிரைவர் தேவகுமார்(49)என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.