தனியார் பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி
திருச்சியில் தனியார் பஸ் மோதி அண்ணன் கண்முன்னே பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
திருச்சியில் தனியார் பஸ் மோதி அண்ணன் கண்முன்னே பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவி
திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் அழகப்பன். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெகஜோதி (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று காலையில் ஜெகஜோதியை பள்ளிக்கு அனுப்புவதற்காக, அவரது அண்ணன் விஜய்குமார் (22) ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். சிந்தாமணி பஜார் பகுதியில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் அண்ணன்-தங்கை இருவரும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது, ஜெகஜோதி மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகஜோதியை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெகஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜய்குமார் லேசான காயத்துடன் தப்பினார்.
இந்த விபத்து குறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (45) என்பவரை கைது செய்தனர்.
சாலை மறியலுக்கு முயற்சி
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதனையடுத்து அங்கு வந்த திருச்சி வடக்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் போராட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.