பிளஸ்-2 மாணவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; ஒருதலைக்காதலால் வாலிபர் வெறிச்செயல்
பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவியை ஒருதலைக்காதல் பிரச்சினையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித் தொழிலாளி. இவருடைய மகள் தங்கமாரி (வயது 17). இவர் செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வரலாறு பிரிவில் படித்து வந்தார்.
இந்த நிலையில் தங்கமாரியை அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சோலையப்பன் (22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தங்கமாரிக்கு கடைசி தேர்வு நடந்தது. அந்த தேர்வை எழுதிவிட்டு அவர் தனது தோழிகளுடன் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தார்.
சரமாரி அரிவாள் வெட்டு
அவர் அங்கிருந்து சிறிது தொலைவில் நடந்து சென்றபோது, எதிரே சோலையப்பன் குடிபோதையில் அரிவாளுடன் வந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த தங்கமாரி, அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினார். ஆனாலும் அவரை சோலையப்பன் விரட்டி சென்றார்.
அப்போது தங்கமாரி கால்தவறி கீழே விழுந்தார். உடனே சோலையப்பன், 'நான் உன்னை காதலித்து வருகிறேன். நீ எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாய். எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று கூறியபடி தங்கமாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே சோலையப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தங்கமாரியை மீட்டு சிகிச்சைக்காக செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சோலையப்பனை கைது செய்தனர்.
அரிவாளால் வெட்டப்பட்ட மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை ஒருதலைக்காதலால் வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.