தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல்


தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தேர்வு மையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மோதிக்கொண்டனர். அப்போது அவர்கள் கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் ஆற்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும், மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு எழுதும்போது ஒருவருக்கொருவர் வாய்த்தகராறில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அதிலிருந்து அந்த மாணவர்கள், இருதரப்பாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு எழுதுவதற்காக வந்த மாம்பழப்பட்டை சேர்ந்த மாணவர்கள், வீட்டில் இருந்து வரும்போதே ரீப்பர் கட்டை, இரும்புக்கம்பிகளுடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.

பள்ளியில் இறைவணக்கம் முடிந்து தேர்வு தொடங்க இருந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைகளுக்குள் சென்றனர்.

மாணவர்கள் மோதல்

அப்போது மாம்பழப்பட்டை சேர்ந்த மாணவர்கள் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, ஆற்காட்டை சேர்ந்த மாணவர்களை ரீப்பர் கட்டை, இரும்புக்கம்பியால் திடீரென தாக்கினர். பதிலுக்கு ஆற்காடு மாணவர்களும் திருப்பி தாக்கினர்.

இதில் ஒரு மாணவருக்கு தலையிலும், மற்றொரு மாணவருக்கு உடலிலும் காயம் ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள் விரைந்து சென்று இருதரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தி தேர்வறைக்குள் அனுப்பி வைத்தனர்.

2 மாணவர்களுக்கு சிகிச்சை

பின்னர், இந்த தாக்குதலில் காயமடைந்த 2 மாணவர்களை அருகில் உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்தனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பள்ளியின் முன்பு காணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதன்மை கல்வி அதிகாரி விசாரணை

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா நேரில் சென்று மாணவர்கள் மோதல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் இருதரப்பு மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆற்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியை தேர்வு மையமாக அறிவிக்க வேண்டும் என கோாிக்கை வைத்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வரும் கல்வி ஆண்டு முதல் நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அதிகாரி தொிவித்தார்.


Next Story