25,339 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்


25,339 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்
x

தஞ்சை மாவட்டத்தில் 25,339 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் 25,339 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்.

பிளஸ்-1 தேர்வு

தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு 112 மையங்களில் நேற்று நடைபெற்றது.இந்த தேர்வை எழுத அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 12,492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.தேர்வுப் பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறைக்கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

1,665 பேர் தேர்வு எழுதவில்லை

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டு இருந்தது.தேர்வு மையங்களில் தடையில்லா குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் தமிழ்தேர்வை 1,647 பேரும், சமஸ்கிருத தேர்வை 14 பேரும், அரபு தேர்வை 3 பேரும், பிரெஞ்சு தேர்வை ஒருவரும் என மொத்தம் 1,665 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story