மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக 323 மி.மீட்டர் மழைபொழிவு


மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக 323 மி.மீட்டர் மழைபொழிவு
x

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக 323.73 மி.மீட்டர் மழை பெய்து இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

மழைபொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. இதனால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 34 ஏரிகள் நிரம்பின. இதையடுத்து மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீட்டர் ஆகும். ஆனால் கடந்த ஆண்டில் 1040.27 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பு மழையளவை விட 323.73 மி.மீட்டர் அதிகம் ஆகும்.

சிறுதானியங்கள்

இதன்மூலம் நெல் 8,962 ஹெக்டேர், சிறுதானியங்கள் 71,690 ஹெக்டேர், பயறு வகைகள் 10,443 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 30,564 ஹெக்டேர், பருத்தி 4,171 ஹெக்டேர் மற்றும் கரும்பு 8,286 ஹெக்டேர் என மொத்தம் 1,34,116 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், தோட்டக்கலை பயிர்களான தக்காளி 565 ஹெக்டேர், கத்திரி 523 ஹெக்டேர், வெண்டை 337 ஹெக்டேர், மிளகாய் 292 ஹெக்டேர், மரவள்ளி 3,295 ஹெக்டேர், வெங்காயம் 3,411 ஹெக்டேர், மஞ்சள் 1,722 ஹெக்டேர் மற்றும் வாழை 2,349 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 2023 ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியத்தை செயல்விளக்கங்கள் மற்றும் கருத்துக்காட்சிகள் மூலம் மக்களிடம் உரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.


Next Story