பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு- போக்குவரத்து மாற்றம்
ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணியளவில் வந்தடைகிறார்.
அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு மதியம் 3.50 மணியளவில் வந்தடைகிறார்.
அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு புறப்படுகிறார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது வரவேற்பை ஏற்றபடி மாலை 4 மணியளவில் சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை வந்தடைகிறார்.
'வந்தே பாரத்'
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழா 20 நிமிடங்கள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மாலை 4.25 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் வருகை தருகிறார். அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். முதலில் இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்து தமிழக காங்கிரசார் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி மெரினா விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சி மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஒரு மணி நேரம் நடக்கிறது. அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி கார் மூலம் புறப்பட்டு அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு மாலை 5.55 மணியளவில் வருகிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேருகிறார்.
உயர்மட்ட பாலம்
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார்.
இதில், தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்தியா சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழா மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரம் நடக்கிறது.
நீலகிரி தெப்பக்காடு
அதன்பிறகு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.40 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்றடைகிறார்.
இரவு அங்கு தங்கும் அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காலை 9.35 மணியளவில் வருகை தந்து சுற்றி பார்க்கிறார். பின்னர் அவர் காலை 9.45 மணியளவில் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு காலை 10.20 மணியளவில் புறப்பட்டு செல்கிறார்.
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்ற உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி நேற்று முன்தினம் மற்றும் நேற்றிரவு நகரில் வாகன சோதனை தீவிரமாக இருந்தது. மேலும் லாட்ஜூகள், தனியார் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் இந்த ஒத்திகை நடந்தது. சென்னை போலீசாருடன் இணைந்து டெல்லியில் இருந்து வந்திருந்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.