பிரதமர் மோடி வருகை: மதுரை, திண்டுக்கல்லில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை, திண்டுக்கல்லில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை 16-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர், ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக பிரதமர் மோடி நாளை காலை பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதியம் 2 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் வருகிறார். பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். 2018-19, 2019-20ம் கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்.
மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிற்கும் வகையில் ஹெலிபேடு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பல முறை ஒத்திகை நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை தருவதால் திண்டுக்கல், காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அருகில் உள்ள சிறுமலை வனப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் மதுரையில் இருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்காக இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மதுரை மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர், நத்தம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயங்களில் மதுரை, திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை திண்டுக்கல்லில் இருந்து காந்தி கிராமம் மார்க்கமாக மதுரை செல்லும் அனைத்து இலகு ரக, கனரக, இருசக்கர வாகனங்கள் அனைத்தும் தோமையார்புரம், செம்பட்டி, காமலாபுரம் வழியாக அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டும்.
மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி, காமலாபுரம், செம்பட்டி, தோமையார்புரம் வழியாக திண்டுக்கல்லை கடந்து செல்ல வேண்டும் என்றும், நாளை (11-ந் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல்லில் இருந்து காந்திகிராமம் மார்க்கமாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் தோமையார்புரம், செம்பட்டி, காமலாபுரம் வழியாக அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 சக்கர வாகன ரோந்தும், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரு சக்கர வாகன ரோந்தும் நியமிக்கப்பட்டும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர், முதல்-அமைச்சர் வந்து செல்லும் வழித்தடங்களில் வெடிகுண்டு கண்டறியும் 30 குழுவினர் நியமிக்கப்பட்டு அவர்களுடன் மோப்பநாய் தடுப்பு படையினரும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை ஆள் இல்லா வான் வெளி வாகனம் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.