பா.ம.க. முன்னாள் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி


பா.ம.க. முன்னாள் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
x

பா.ம.க.வின் முன்னாள் பெண் நிர்வாகி சொத்து தகராறு காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

பா.ம.க.வின் முன்னாள் பெண் நிர்வாகி சொத்து தகராறு காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க. முன்னாள் பொருளாளர்

பவானி அருகே உள்ள எலவமலை மூலப்பாளையம் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (வயது 55). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்தார். சரோஜாவின் கணவர் குழந்தைவேல் இறந்து விட்டார். ஒரு மகள் உள்ளார். அவரும் சரோஜாவுடன் தொடர்பில் இல்லை.

இந்தநிலையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு சரோஜா ஒரு மனுவுடன் வந்தார். அவர் மாவட்ட கலெக்டரிடம் அந்த மனுவை கொடுத்து விட்டு, பகல் சுமார் 12 மணி அளவில் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்தார்.

தீக்குளிக்க முயற்சி

மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் பகுதிக்கு வந்த அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் சரோஜாவின் கையில் இருந்த பாட்டில் மற்றும் பையை பிடுங்கினர். பின்னர் அவர் மீது பெண் போலீசார் தண்ணீரை ஊற்றினர்.

பா.ம.க. முன்னாள் நிர்வாகியான சரோஜா கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணன் மீது புகார்

இதுகுறித்து சரோஜா கூறியதாவது:-

எனது அப்பாவுக்கு சொந்தமான நிலம் எலவமலை மூலப்பாளையத்தில் உள்ளது. அதில் எனக்கு வரவேண்டிய இடத்தையும் சேர்த்து எனது அண்ணன் ஆக்கிரமித்து உள்ளார். இதுதொடர்பாக 30 ஆண்டுகளாக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். சித்தோடு போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக வழக்கு கோர்ட்டிலும் தொடரப்பட்டு, எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால், எனக்கு உரிய இடத்தை தராமல் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டி வருகிறார். என்னை அந்த இடத்திற்குள் அனுமதிக்கவும் மறுக்கிறார். நான் தனியாக இருக்கும் பெண், எனக்கு யாரும் துணை இல்லை. இது குறித்து ஏற்கனவே சித்தோடு போலீஸ் நிலையத்திலும், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்து இருந்தேன். இதனால் கொலை மிரட்டலும் வருகிறது. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவதை நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

அதைத்தொடர்ந்து விசாரணைக்காக சரோஜாவை போலீசார் சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


Related Tags :
Next Story