பா.ம.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்
திட்டப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தனது கட்சி நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திட்டப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தனது கட்சி நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
எம்.எல்.ஏ. தர்ணா
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றியம் மூலம் நடைபெற்று வரும் சாலை, சாக்கடை கால்வாய், பாலம் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பா.ம.க. எம்.எல்.ஏ. அருளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண அருள் எம்.எல்.ஏ. நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.
ஆனால் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு இல்லை. இதனால் ஆவேசம் அடைந்த அருள் எம்.எல்.ஏ. மற்றும் பா.ம.க.வினர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது, அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என்று போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
இதுகுறித்து அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் ஊராட்சி ஒன்றியம் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளில் தரம் இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். திட்டப்பணிகளின் தரம் குறித்து தணிக்கைக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டால் எந்த பதிலும் முறையாக தருவதில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு கூட ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதிகாரிகளால் அழைப்பு விடுக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து பணிகளையும் தர கட்டுப்பாட்டு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.