பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் -அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்
சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
சோழர் கால பாசன திட்டம்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- அரியலூரில் சோழர் கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். இதையடுத்து பொன்னேரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், பூங்கா அமைக்கவும் முதல் கட்டமாக ரூ.622 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசன ஏரிகளையும் தூர்வார முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது. 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடாகும். ஆனால் தடுப்பணைகளுக்கு பதிலாக 10 இடங்களில் மண் குவாரிகளை தமிழக அரசு திறந்துள்ளது.
பூரண மதுவிலக்கு
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறிய மு.க.ஸ்டாலின் தற்பொழுது முதல்-அமைச்சராக உள்ள நிலையில் அது குறித்து எந்த நிலைப்பாடும் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறை மது விற்பனையை எவ்வாறு அதிகரிக்கலாம் என பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதனால் மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.