போக்சோ சட்டத்தினால் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா?


போக்சோ சட்டத்தினால் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா?
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:48 PM GMT)

போக்சோ சட்டத்தினால் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா? என்று மாணவிகள் கருத்து தொிவித்துள்ளாா்கள்.

கள்ளக்குறிச்சி

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் போக்சோ சட்டம். 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.

குழந்தையின் சாட்சியம்

அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இந்த சட்டத்தில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதில் குற்றம் புரிபவர்களுக்கு சாதாரண சிறை தண்டனையில் இருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை அளிக்கலாம் என சட்டம் கூறுகிறது.

ஆனால் நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து போதுமான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பாலியல் சீண்டல்கள்

இருப்பினும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இன்னமும் தயக்கம் உள்ளது. குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 4 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாரும், தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியவற்றுடன் இணைந்து போக்சோ சட்டம் குறித்தும், எவை பாலியல் சீண்டல், எது நல்ல தொடுதல் (குட் டச்), எது தீய தொடுதல் (பேட் டச்) என்பது குறித்து மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு

இதன் மூலம் குழந்தைகள், மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள், தைரியமாகவும், தயக்கமின்றியும் முன்வந்து புகார் அளிக்க போலீஸ் நிலையங்களை நாடுகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், போலீசார் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வே ஆகும்.

இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், அதுதொடர்பாக தங்களின் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தெரிவிக்கின்றனர். இதன் மூலம் குற்றம் புரிபவர்களை, போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், மாணவ- மாணவிகள், பெற்றோர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

குற்றங்கள் குறைந்துள்ளது

விழுப்புரம் மாணவி ரீனா:-

கிராமப்புறங்களில் இருந்து அரசு பள்ளிக்கு பஸ்சில் வரும்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி சிலர் தவறான தொடுதலில் ஈடுபடுவார்கள். இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் பெற்றோர் தங்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது. இதனால் தனியாக செல்லவே அச்சப்பட்டு வந்த மாணவிகள் தற்போது இச்சட்டம் வந்த பிறகு துணிச்சலுடனும், தைரியமுடனும் வெளியே சென்று வருகிறோம். எங்களுக்குள் இருந்த பயம், தயக்கம் தற்போது முற்றிலும் நீங்கி விட்டது. எங்கு சென்றாலும் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்புடனும் சென்று வருகிறோம். இச்சட்டத்தின் மூலம் பாலியல் சீண்டல் புரிபவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதுபோன்ற குற்றங்கள் பெரிதும் குறைந்துள்ளது. எங்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதால் அதுபோன்ற செயல்களும் குறைந்துள்ளது. நாங்கள் எந்தவித தொந்தரவுகளும் இன்றி பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்கிறோம். போக்சோ சட்டத்தின் மூலம் எங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பான சட்டம்

திண்டிவனத்தை சேர்ந்த மாணவி சுதர்சனா:-

போக்சோ சட்டம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சட்டமாகும். இந்த சட்டத்தினால் தைரியமாகவும் சுதந்திரமாகவும் யாருக்கும் பயப்படாமல் வெளியில் செல்ல முடிகிறது. என்னுடன் படிக்கும் மாணவிகள் மட்டுமின்றி அக்கம், பக்கத்தினர், உறவினர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் 1098 என்ற எண் மூலம் சைல்டுலைனுக்கும் தெரிவிப்பேன். மகளிர் போலீசார் எங்கள் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தியதால் நாங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்பேரில் பாதுகாப்பாக இருக்கிறோம். போக்சோ சட்டம் குறித்து தெரியாத மாணவிகள் மற்றும் சிலருக்கும் இச்சட்டம் குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நேரத்தை ஒதுக்கி அன்புடன் பேசினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடுமையாக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சரண்யா:-

போக்சோ சட்டம் பற்றி மாதந்தோறும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், பள்ளிக்கு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அதே போல் யாராவது பின் தொடர்ந்தால் அல்லது தேவையில்லாமல் பேசினாலோ பாலியல் தொந்தரவு கொடுத்தால்(1098) என்ற நம்பருக்கு போன் செய்ய வேண்டும், போலீசில் புகார் அளிக்குமாறும், தெரிவித்துள்ளார்கள். போக்சோ சட்டம் பற்றி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளது. இந்த சட்டம் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் சந்திரவேல்:-

போக்சோ சட்டத்தினால் இன்றைக்கு மாணவிகள் மத்தியில் எந்தளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதேபோல் மாணவர்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை மட்டுமின்றி சிறுவர்களையும் தவறான எண்ணத்தில் தொட்டாலோ, ஏதேனும் தொந்தரவு செய்தாலோ போக்சோ சட்டம் பாயும். இதனால் தங்களின் எதிர்கால வாழ்க்கையே வீணாகி விடும் என தற்போதுள்ள மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்தினால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கும் கூட ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களிடம் இச்சட்டம் குறித்து இன்னும் போதிய விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளியில் புகார் பெட்டி

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை கவிதா:-

போக்சோ சட்டம் வந்த பிறகு பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் இறைவணக்கம் முடிந்ததும் ஒரு ஆசிரியர் மூலமாக போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர பள்ளியிலேயே புகார் பெட்டியும் வைத்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறை மட்டுமின்றி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சமூகநலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சைல்டுலைன் என பல்வேறு துறைகள் சார்பில் அவ்வப்போது இச்சட்டம் குறித்து மாணவ- மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் குட் டச், பேட் டச் எதுவும் கிடையாது, நோ டச் என்பதை ஒரு மந்திரமாகவே மாணவிகள் தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.

கடுமையாக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி தமிழ் ஆசிரியை ஆண்டாள்:-

போக்சோ சட்டம் வரவேற்க தக்கது. சட்டத்தைப் பற்றி அவ்வப்போது மாணவிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் காலை நேர இறை வணக்கம் நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவிகள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வுள்ளது. தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றவர்கள், வெளியே வந்த பிறகு மீண்டும் சிறுமிகள், மாணவிகளுக்கு தொந்தரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சட்டத்த்தில் தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

நம்பிக்கையை ஏற்படுத்துகிறது

விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் லூசியா:-

கிராமங்கள்தோறும் நீதிமன்றத்தின் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பரப்புரையாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற குற்றங்களுக்கென்று தனியாக சிறப்பு நீதிமன்றமும் உருவாக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை மற்றும் விழிப்புணர்வுகளால்தான் பாலியல் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளது. பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு நீதிமன்றம் மூலம் முறையான விசாரணை, உரிய தண்டனை வழங்கப்படுவது பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களாகவே சிறப்பு வக்கீலையும், சமூக ஆர்வலர்களையும் நியமித்துக்கொள்ள உரிமை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு உள்ளது

மேல்மலையனூர் அருகே தாயனூரை சேர்ந்த விமலா:-

போக்சோ சட்டம் வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. குற்றம் செய்பவர்களுக்கும் ஒருவித பயம் உள்ளதால் பெண்களுக்கான பாதுகாப்பு இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கும் இச்சட்டம் தெரியும் வகையில் அவர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சில இடங்களில் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில்...

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றால் கிராமத்தை சேர்ந்த ஹரி:-

போக்சோ சட்டம் வருவதற்கு முன்பு, கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து போலீஸ் நிலையங்களிலோ அல்லது வெளியில் யாரிடமோ சொல்வதற்கு தயக்கம் காட்டினர். ஆனால் இப்போது இந்த சட்டம் குறித்து பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு இடங்களில் காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் மூலம் மாணவிகளை, பெண்களை கேலி, கிண்டல் செய்வது, தவறாக நடந்துகொள்வது போன்ற சம்பவங்கள் பெருமளவில் குறையத்தொடங்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்து வருவதற்கு காரணம் கிராமப்புறங்களில் இச்சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே தொடர்ந்து போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பாலியல் குற்ற சம்பவங்கள் இன்னும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

கடுமையான தண்டனை

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை துரைபாபு:-

போக்சோ சட்டம் பற்றி எங்களை போல் உள்ள பெற்றோர்களுக்கு ஓரளவு தான் தெரியும். அதே போல் சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கும் ஓரளவு தான் தெரிகிறது. எனவே பள்ளிகளில் வாரந்தோறும் பாலியல் தொந்தரவு சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் தொந்தரவு மற்றும் சீண்டல் மற்றும் தவறான செயலில் ஈடுபடும் நபர்களுக்கு போக்சோ சட்டத்தை விட இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.அப்போதுதான் இதனை பார்த்து மற்றவர்கள் பாலில் தொந்தரவு மற்றும் சீண்டல் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.


Next Story