கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுைர மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 23-ந்தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.