அதிக லாபம், பகுதிநேர வேலை தருவதாக கூறிஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை


அதிக லாபம், பகுதிநேர வேலை தருவதாக கூறிஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Sep 2023 7:00 PM GMT (Updated: 10 Sep 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

அதிக லாபம், பகுதிநேர வேலை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே போத்தாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி செல்போனில் டெலிகிராம் செயலியில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக சம்பளம், கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது.

அதனை நம்பிய பாலசுப்பிரமணியன் அந்த லிங்கை கிளிக் செய்ததன் மூலம் வந்த செல்போன் எண்ணில் மர்ம நபர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த நபர் கூறியபடி பாலசுப்பிரமணியன் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 329-ஐ அனுப்பினார். அதன்பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் `சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

இதேபோல் கிருஷ்ணகிரி சாமந்தமலை அருகே தளவாய்பள்ளி கிராமத்தை சேர்ந்த அருண்குமாருக்கு செல்போன் வாட்ஸ்அப்பில் ஓட்டல் முன்பதிவு செய்யும் வேலை சம்பந்தமாக ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அதிக லாபம் மற்றும் கமிஷனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக இருந்தது. இதனை நம்பிய அருண்குமார் மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 59 ஆயிரத்து 470-ஐ செலுத்தினார்.

அதன்பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டபோது செல்போன் `சுவிட்ச்ஆப்' என்று வந்தது. அதன்பின்னர் அருண்குமார் தன்னை மர்மநபர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story